

சென்னை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள செய்தியில், நாடறிந்த பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், தமிழ்நாடு அரசின் முதல்-அமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. தமிழக வெற்றிக்கழகம், தனது முகப்பு பதாகையில் மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” குறட்பாவை கொள்கை நிலையாக அறிவித்துள்ளது.
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடவுள் மீதும், வழிபாடுகள் மீதும் நம்பிக்கை கொண்டவராக இருக்கலாம்; அது, அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறையாகும். ஆனால், மதச்சார்பின்மை பண்புகளை அடிப்படையாக கொண்ட அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அரசு எந்த மதச்சார்பு அடையாளத்தையும் கொண்டிருக்க கூடாது என்பது நாடு பின்பற்றி வரும் மரபாகும். அறிவியல் கண்ணோட்டமும், பகுத்தறிவு சிந்தனையும் வளர்த்து, வலிமைப்படுத்த வேண்டிய அரசு, முதல்-அமைச்சரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ஒருவரை நியமித்திருப்பது சரியல்ல.
இது பொதுமக்களிடம் தவறான நம்பிக்கைகளை ஊக்கப்படுத்துவதாகவே அமையும் என்பதால், ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு முதல்-அமைச்சரை வலியுறுத்தி கேட்டு கொள்கிறது என தெரிவித்து உள்ளார்.