

சென்னை,
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு இறுதித் தீர்ப்பு அளித்தது. அதில், காவிரி நடுவர் மன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பாக கூறிவிட்டது.
இந்த உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பதற்கான செயல் திட்டத்தை 6 வாரங்களின் முடிவு நாளான 29-ந் தேதிக்குள் (இன்று) மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டுள்ளதா என்பது வெளிப்படையாக தெரியவில்லை.
இந்த நிலையில், காவிரி நீர்ப் பங்கீட்டை மேற்பார்வை செய்யும் ஒரு மேற்பார்வை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் டெல்லிக்கு 27-ந் தேதி சென்றனர்.
மத்திய நீர்வளர்த்துறை அமைச்சகம் ஏற்கனவே கூறியிருந்தபடி, காவிரி விவகாரம் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகளிடம் அளித்தனர். அந்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைப்பதற்கான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசுக்காக ஆஜராகி வாதிடும் மூத்த வக்கீல்களையும் சந்தித்து எஸ்.கே.பிரபாகர் மற்றும் சுப்பிரமணியம் ஆலோசனை நடத்தினார்கள். நீண்ட நேரம் இந்த ஆலோசனை நடந்தது.
இதற்கிடையே மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்திருந்த காலக்கெடு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைவதையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம், இன்று தலைமைச் செயலகத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. தலைமைச் செயலகத்தில் பழைய அமைச்சரவை கூட்ட அரங்கத்தில் இந்த கூட்டம் காலை 10 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் அதன் தீர்ப்பை நிறைவேற்றாவிட்டால், சட்டப்பூர்வமாக மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய வழிவகை உள்ளது. அதன்படி, அடுத்தகட்ட சட்டப் பூர்வமான நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.