

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய், உடையில் தனக்கென்று ஒரு பாணியை கடைபிடித்து வருகிறார். கருப்பு நிற பேண்ட், கோட், வெள்ளை நிற சட்டை அணிந்து தலைமைச் செயலகத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு சில நாட்கள் மட்டும் கோட் அணியவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் முதல்-அமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அப்போது இளமஞ்சள் நிறத்தில் பட்டு வேட்டி, சட்டையை அணிந்திருந்தார். இது, ' அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களை ஈர்த்தது.
இதுபற்றி கேட்டபோது, முதல்-அமைச்சர் விஜய்யின் மேலாளரான ஜெகதீஸ் வீட்டில் நேற்று காலை ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதில் பங்கேற்பதற்கு பட்டு வேட்டி. சட்டை அணிந்து முதல்-அமைச்சர் விஜய் சென்றார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அதே உடையுடன் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வந்தார் என்று கூறப்பட்டது.