

தமிழக சட்டசபையில் பேசும் எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சியின் தலைவர்கள் புகழ்ந்து பேசுவதை பார்க்க முடிகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் இல்லாமல் அனைத்து எம்.எல்.ஏக்களும் புகழ்ந்து பேசுகிறார்கள். அந்த வகையில், இன்று முதல் அமைச்சர் விஜய்யை த.வெ.க எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் புகழ்ந்து பேசினார்.
பாரிக்கரையிலே மண்டபம் ஒன்றை வளர்ந்து நாரியர்கள் கூடி நாடெங்கும் வாசமிட்டு ஒரு குடைக்குள் ஆள்வாய் உன் காலம் என் மகனே என்று பாடல் பாடி புகழ்ந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நம்முடைய முதல் அமைச்சர் விஜய் மற்ற முதல் அமைச்சர் போல் இல்லை. நம்முடைய முதல் அமைச்சருக்கு புகழாரம் பிடிக்காது. தங்களுடைய தொகுதி சார்ந்த தேவைகளை குறித்து மட்டும் பேசுங்கள். சட்டப்பேரவையில் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் தொகுதி சார்ந்த தேவைகளை குறித்து மட்டும் பேச வேண்டும்" என்றார்.
அப்போது எழுந்து பேசிய முன்னாள் அமைச்சர் நேரு, "முதல் அமைச்சருக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மற்ற முதல் அமைச்சர்களை போன்று எங்கள் முதல் அமைச்சர் இல்லை என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் புகழ்ச்சி பிடிக்காது. தன்னை சட்டமன்ற உறுப்பினர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என பேரவையிலேயே எழுந்து நின்று சொன்னவர் தான் மு க ஸ்டாலின்" என்றார்.