இளையராஜாவுக்கு முதல்-அமைச்சர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இளையராஜாவுக்கு முதல்-அமைச்சர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
Published on

சென்னை,

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

இசையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளைப் படைத்து வரும இசைஞானி இளையராஜா இன்று தனது 83வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நேரிலும், சமூக வலைதளங்களிலும் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசைஞானி இளையராஜா அவர்களின் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.

உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com