

சென்னை,
முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சுவாமிநாதன், டாக்டர் எச்.வி.ஹண்டே ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கிய முதல்-அமைச்சர் விஜய், அவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.
தமிழக சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் இன்று (27.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களுமான வி.வி.சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி.ஹண்டே ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இருவருக்கும் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார். அப்போது வி.வி.சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி.ஹண்டே ஆகியோரின் கால்களில் விழுந்து முதல்-அமைச்சர் விஜய் ஆசி பெற்றார்.
15.2.1927 அன்று பிறந்த வி.வி.சுவாமிநாதன் சிதம்பரம் நகராட்சித் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், பொதுமக்களின் குறைகளை நேரடியாக அறிந்து தீர்வுகாணும் வகையில் புகார் பெட்டி முறையை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். 1972-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் புவனகிரி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியதுடன், முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, கைத்தறி, செய்தி, சுற்றுலா மற்றும் மின்சாரம் உள்ளிட்ட 13 முக்கியத் துறைகளின் பொறுப்புகளை ஒரே நேரத்தில் வகித்து, நிர்வாக அனுபவத்திலும் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் ஆவார்.
28.11.1927 அன்று பிறந்த டாக்டர் எச்.வி.ஹண்டே சிறந்த மருத்துவராகவும், அரசியல் தலைவராகவும், எழுத்தாளராகவும் விளங்கியவர். 1942-ம் ஆண்டில் மாணவர் பருவத்திலேயே ‘வெள்ளையேனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டு நாட்டுப் பற்றினை வெளிப்படுத்தினார். 1950-ம் ஆண்டு முதல் எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை ஆற்றி வருகிறார். ஐந்து முறை சட்டமன்ற மற்றும் சட்டமேலவை உறுப்பினராகவும், முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில் 1980-ம் ஆண்டு முதல் 1986-ம் ஆண்டு வரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் போலியோ ஒழிப்பு, தடுப்பூசித் திட்டங்கள், தொழுநோய் கட்டுப்பாடு மற்றும் தாய்-சேய் நல மேம்பாடு மற்றும் கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தியதற்காக மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான டாக்டர் பி.சி.ராய் விருதையும், 2026-ம் ஆண்டில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். மேலும், கம்பராமாயணத்தை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இலக்கிய ஆளுமையும் ஆவார்.
மூத்த அரசியல் ஆளுமைகளான வி.வி.சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி.ஹண்டே ஆகியோரைப் போற்றும் விதமாகவும், சட்டமன்ற ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூரும் விதமாகவும், தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று அவ்விருவரையும் சிறப்பித்தார். அப்போது, வி.வி.சுவாமிநாதன், முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கையொப்பமிடப்பட்ட நூறு ரூபாய் தாளை தமிழக முதல்-அமைச்சரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் இரா.சாந்தி, அரசு உயர் அலுவலர்கள், வி.வி.சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி.ஹண்டே குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.