ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் 2-வது நாளாக முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளின் மாநாடு நேற்று தொடங்கியது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் 2-வது நாளாக முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை
Published on

சென்னை,

கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

தமிழகத்தில் ஒவ்வொரு அரசும் ஆண்டுதோறும் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை நடத்துவது வழக்கம். இந்த மாநாட்டில்தான் சட்டம்-ஒழுங்கு, அரசின் திட்டங்கள் போன்றவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. நேற்றைய கூட்டத்தில் 2 அமர்வுகள் நடத்தப்பட்டன. முதல் அமர்வில் கலெக்டர்களும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து பங்கேற்றனர். 2-ம் அமர்வில், அரசுத் துறைகளின் செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

பாரபட்சமின்றி தண்டனை..

மாநாட்டை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைத்து பேசுகையில், வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசாக இந்த அரசை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின் சாரம், சாலை வசதி, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதி களில் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை பொறுத்தவரை, சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறிகூட பாதிக்கப்பட்டுவிடக்கூடாது.

முக்கியமாக பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்ப டுத்த வேண்டும். அதில் மாற்றம் இல்லாமலும், சமரசம் இல் லாமலும் செயல்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கு உரிய சிறப்பு ஏற்பாடுகளை செய்தே ஆக வேண்டும். அதன் படி, மாவட்ட கலெக்டர்களும் போலீஸ் சூப்பிரண்டுகளும் இதில் கூர்மையான மற்றும் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

2-வது நாளாக மாநாடு

இந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் 2-வது நாளாக மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள், வனத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். மாலை 6 மணி வரை இக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தின் நிறைவில் முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றுவார். அப்போது திறமையாக செயல்பட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகளை பாராட்டி பரிசுகளை வழங்குவார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com