

சென்னை,
த.வெ.க. ஆட்சி அமைந்து ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் போலீஸ் டி.ஜி.பி. அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், சரக டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்கள், வனத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டை 3 அமர்வுகளாக பிரித்து நடத்த முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இன்று நடைபெற்று வரும் முதல் அமர்வில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த அமர்வில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், பொது சுகாதாரம், 'போதையில்லா தமிழ்நாடு' திட்டம், 'வெற்றி தமிழகம்' தொலைநோக்கு திட்டம் என 28 துறைகளின் செயல் திட்டங்கள் குறித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதலில் சட்டம் ஒழுங்கு தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வு, குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள், போலீஸ் நிர்வாகத்தின் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆய்வு செய்யப்பட்டது.
அதில், உளவுத் தகவல்கள் சேகரிப்பு, பிடி ஆணைகளை செயல்படுத்துவது, தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடுவோர், ரவுடிகள், ஐாமீனில் உள்ளவர்களை பின்தொடர்ந்து சாதி பிரச்சினைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. அதன்பின்னர், பெண்கள் பாதுகாப்பு, சிங்கப்பெண் அதிரடிப்படையின் செயல்பாடுகள், போக்சோ வழக்குகளின் நிலை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன் பின்னர் போதை பொருள் இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் அதற்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்வி நிறுவனங்களில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கள்ளச்சாராயத்தை கடுமையாக ஒடுக்குவது, தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவை உள்பட பல்வேறு சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மாநாட்டில் நடக்கும் 2-வது அமர்வில் கலெக்டர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் அனைத்து அரசுத் துறைகளின் பயன்களும் மக்களுக்கு சென்றடைந்துள்ளதா? அதில் இருக்கும் தடங்கல்கள் என்ன? என்பது போன்ற அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.
3-வது அமர்வில் கலெக்டர்கள் மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். 2 நாட்களாக நடக்கும் இந்த அமர்வுகளின் நிறைவில் முதல் அமைச்சர் விஜய் உரையாற்றுகிறார். அப்போது திறமையாக செயல்பட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளை பாராட்டி பரிசுகளை வழங்குகிறார்.