ரூ.710 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல்

காணொலிக் காட்சி வாயிலாக 112.85 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார்.
முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

ரூ.710 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 112.85 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 710.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்

திருப்பூர் மாநகரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், வடக்கு மற்றும் தெற்கு திருப்பூர் பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தவும், மழைக்காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் போக்குவரத்துத் தடைகளைத் தவிர்ப்பதற்காகவும் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின் கீழ், 18 கோடி ரூபாய் செலவில் திருப்பூர் மாநகராட்சி, வார்டு 44-க்குட்பட்ட ஈஸ்வரன் கோவில் சாலையில், ஸ்ரீ சக்தி தியேட்டர் சாலை மற்றும் யூனியன் மில் சாலையை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டப் பாலம் நகரின் வளர்ந்துவரும் மக்கள்தொகை, தொழில் வளர்ச்சி மற்றும் எதிர்காலப் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில்கொண்டு. முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

பெருந்துறை நகராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு, நாள்தோறும் நபர் ஒருவருக்கு 73 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் விநியோகக் குழாய்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளதாலும்,அவை அனைத்தும் பழுதடைந்து அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாலும், நகராட்சிப் பகுதிகள் வளர்ச்சி அடைந்த பகுதிகளாக உள்ளதாலும், தற்போதைய மக்கள்தொகை மற்றும் குடிநீரின் தேவையினைப் பூர்த்தி செய்யும் நோக்கில், இப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் 22.65 கோடி ரூபாய் செலவில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும், எல்லைமேடு பகுதியில் 1.5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கக் தொட்டி, 117.26 கி.மீ நீளமுள்ள பகிர்மானக் குழாய்கள் மற்றும் 2.010 கி.மீ நீளமுள்ள பிரதான குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 10,080 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு நகரம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

கோத்தகிரி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு, நாள்தோறும் நபர் ஒருவருக்கு 70 லிட்டர் (LPCD) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் விநியோகக் குழாய்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளதால் அவை அனைத்தும் பழுதுதடைந்து அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாலும், நகராட்சிப் பகுதிகள் வளர்ச்சி அடைந்த பகுதிகளாக உள்ளதாலும், தற்போதைய மக்கள்தொகை மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டும், இந்நகர்ப் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டும் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 42.69 கோடி ரூபாய் செலவில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஈளாடா தடுப்பணையிலிருந்து 11.40 கி.மீ குடிநீர் பிரதான விநியோகக் குழாய்கள் (Feeder main) மற்றும் 48.64 கி.மீ பிரதான பகிர்மானக் குழாய்கள் (Distribution main) பதிக்கும் பணிகள், 6 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள், 40 கி.மீ நீளத்திற்கு சாலை மறுசீரமைப்புப் பணிகள் நிறைவுற்றுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் 3,596 எண்ணிக்கையிலான வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதால் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு நாள்தோறும் நபர் ஒருவருக்கு 100 லிட்டர் (LPCD) அளவிற்குக் குடிநீர் விநியோகம் வழங்கப்படும்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகளை உள்ளடக்கிய இப்பகுதி மக்களுக்கு நாள்தோறும் நபர் ஒருவருக்கு 95 லிட்டர் (LPCD) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள குடிநீரேற்று நிலையம் மற்றும் குடிநீர் விநியோகக் குழாய்கள் சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவையாகும். நகராட்சிப் பகுதி விரிவடைந்து, மக்கள்தொகை அதிகரித்ததாலும் தற்போதைய குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து, பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் வழங்கும் நோக்கில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 29.51 கோடி ரூபாய் செலவில் குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்கீழ், தரைமட்ட நீரேற்று நிலையம், பொதிகையடி பகுதியில் நாளொன்றுக்கு 4 மில்லியன் லிட்டர் (MLD) கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், 81.748 கி.மீ நீளமுள்ள பகிர்மானக் குழாய்கள், 6.252 கி.மீ நீளமுள்ள குடிநீர் பிரதான விநியோகக் (Feeder Main) குழாய்கள் அமைத்தல், 1.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் என மொத்தம் 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள், 12,890 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் ஆகியன நிறைவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் நிறைவு பெற்றதால் தற்போது அனைத்து வீடுகளுக்கும் நாள்தோறும் நபர் ஒருவருக்கு 135 லிட்டர் (LPCD) அளவிற்குக் குடிநீர் வழங்கப்படும்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் நகராட்சி நிருவாக இயக்குநரகம் சார்பில் மொத்தம் 112 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவிலான 4 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்

திண்டுக்கல் மாநகராட்சியில் 74.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன், நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இப்புதிய பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதி. 81 வணிகக் கடைகள், உணவகங்கள். இருசக்கர வாகன நிறுத்துமிடம்.சுற்றுச்சுவர். 2 5 கழிப்பிடங்கள், கண்காணிப்புக் கேமரா (CCTV) வசதி. சோலார் மின்சக்தி அமைப்பு, மழைநீர் சேகரிப்பு அமைப்பு. கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் நீர் மறுபயன்பாட்டு வசதி, பசுமைப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், திண்டுக்கல் மாநகரில் பேருந்துப் போக்குவரத்து மேலாண்மை மேம்படுவதுடன், பயணிகளுக்குப் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் அனைத்து நவீன வசதிகளுடனும் கூடிய பேருந்து நிலைய சேவை கிடைக்கும். மேலும், நகரின் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பொதுமக்களின் பயண வசதியும் கணிசமாக மேம்படும்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 245.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் வங்கி (K1W) நிதியுதவியுடன், குடிநீர்த் திட்டப்பணிகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டப் பணியில் காவிரி ஆற்றில் கூடுதல் குடிநீர் ஆதாரம் நாளொன்றுக்கு 26.83 மில்லியன் லிட்டர் (MLD) பெறுவதற்கான ஊடுருவல் கிணறு 2 எண்ணிக்கை. புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3 எண்ணிக்கை, பழைய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10 எண்ணிக்கை மாற்றி அமைத்தல், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் 2 எண்ணிக்கை மற்றும் 126 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் விநியோகக் குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டப்பணி முடிவுறும்போது, கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்துக் குடியிருப்புகளுக்கும் குடிநீர்க் குழாய் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் தினசரி வழங்கப்படும்.

திருவேற்காடு நகராட்சியில் 165.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் வங்கி (KIW) நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீராதாரத்திலிருந்து குடிநீர் பெற்று, நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் (LPCD) என்ற அளவில் மொத்தம் நாளொன்றுக்கு 16.34 மில்லியன் லிட்டர் (MLD) பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 98,499 மக்கள் பயன்பெறுவதுடன், 23,368 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 17.80 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிரதான குடிநீர்க் குழாய்களும், 208 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பகிர்மானக் குழாய்களும் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 91.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் 10 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 தொட்டிகள், 7.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 தொட்டி, 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தொட்டிகள், 2.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 தொட்டி மற்றும் 1.50 இவட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 தொட்டி மற்றும் 20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டப் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், திருவேற்காடு நகராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் மேலும் மேம்பட்டு, பொதுமக்களுக்கு சீரான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வசதி உறுதி செய்யப்படும்.

மாங்காடு நகராட்சியில் 225.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் வங்கி (KIW) நிதியுதவியுடன், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தி. நவீன கழிவுநீர் மேலாண்மை வசதியை ஏற்படுத்தும் நோக்கில், பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 68,700 மக்கள் பயன்பெறும் வகையில் 20,258 வீட்டுக் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 84.19 கிலோ மீட்டர் நீளத்திற்கு பகிர்மானக் கழிவுநீர் குழாய்களும், 5.52 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிரதான கழிவுநீர் குழாய்களும் அமைக்கப்படவுள்ளன. மேலும், 3,667 இயந்திரத் துளைகள் (Machine Holes), 3 கழிவுநீர் உந்து நிலையங்கள் (Pumping Stations) மற்றும் 3 கழிவுநீர் ஏற்று நிலையங்கள் (Lift Stations) அமைக்கப்படவுள்ளன.

இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் நகரின் சுகாதாரத் தரம் மேம்படுவதுடன், கழிவுநீர்த் தேக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்கப்பட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான கழிவுநீர் மேலாண்மை வசதி ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் நகராட்சி நிருவாக இயக்குநரகம் சார்பில் மொத்தம் 710 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் சத்யபாமா, பாலமுருகன், ராம்குமார், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. மனிஷ் நாரணவரே. திருப்பூர் மாநகராட்சி மேயர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எம்.பி. அமித், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com