தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய்

கோவையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் சுமார் 11.4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ செல்ல உள்ளார்.
தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய்
Published on: 

சென்னை,

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் உள்ளது.

பெரியார் நூலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் முதல்-அமைச்சர் விஜய் கோவை விமானம் நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர், அதிகாரிகள் மற்றும் த.வெ.க.வினர் வரவேற்பு அளிக்கிறார்கள்.

ரோடுஷோ

பின்னர் அவர், அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 10 கிலோ மீட்டர் தூரம் ரோடுஷோ சென்றபடி மக்களை சந்திக்கிறார். காலை 11.45 மணிக்கு நூலகத்தின் முகப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகம் கல்வெட்டை திறந்து வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து அறிவுலகத்தில் உள்ள வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவு, அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

புதிய பணிகளுக்கு அடிக்கல்

பின்னர் நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுஉள்ள விழா மேடைக்கு செல்கிறார். அங்கு அவரை அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்று நினைவுப்பரிசு வழங்குகிறார்கள். இதையடுத்து கோவை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். அதோடு புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

கோவையில் முதன்முறையாக..

முதல்-அமைச்சராக விஜய், பதவியேற்ற பின் கோவையில் நடைபெறும் அரசு விழாவில் முதன்முறையாக பங்கேற்க உள்ளார். எனவே அவரை வரவேற்கவும், பார்க்கவும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவினாசி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் விஜய் வருகையால் த.வெ.க.வினர் உற்சாகம் அடைந்து உள்ளனர். அவரை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மேலும் நூலக வளாகத்தில் அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. விமான நிலையம் முதல் காந்திபுரம் நூலகம் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ரோடு ஷோ

கோவையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் சுமார் 11.4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ சென்று கோவை மக்களை சந்திக்க உள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து தொடங்கி காந்திபுரம் அறிவுலகம் வரை முதல்-அமைச்சரின் ரோடு ஷோ நடைபெற உள்ளது. முதல்-அமைச்சரை வரவேற்பதற்காக த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com