

சென்னை,
தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். தமிழக முதல் அமைச்சர் விஜய் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த மாநாட்டில் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் பங்கேற்க உள்துறை மந்திரி அமித்ஷா இரவு 9 மணியளவில் சென்னை வந்தார். பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அவர் வருகை தந்தார்.
அங்கு நட்சத்திர ஹோட்டலில் மத்திய மந்திரி அமித்ஷாவை முதல்-அமைச்சர் விஜய் பூங் கொத்து கொடுத்து வரவேற்றார். மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா, அந்தமான்-நிக் கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அதிகாரிகள் வந்திருந்தனர்.
அவர்களும் மத்திய மந்திரி அமித்ஷாவை வரவேற்றனர். அதனை தொடர்ந்து அமித்ஷா சிறிது நேரம் கலந்துரையாடினார். அமித்ஷாவும், விஜய்யும் சந்தித்து சிறிது நேரம் பேசினர். அதன்பின் இரவு விருந்தில் அனைவரும் உணவருந்தினர்.