

சென்னை,
மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்தை வரும் டிசம்பர் மாதம் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 5 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு நவீன சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.277 கோடியில் 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 சைக்கிள்களை கொள்முதல் செய்வதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை டெண்டர் வெளியிட்டிருந்தது.
இந்த டெண்டரில் பங்கேற்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 28-ந் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டெண்டர் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
இதன்படி நவீன வடிவமைப்பில் சைக்கிள்கள் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டதை விட எடை குறைவாகவும், உறுதியாகவும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இரவிலும் போதிய வெளிச்சமில்லாத நேரங்களிலும் ஒளிரும் வகையில் முன்பகுதி மற்றும் பின் பகுதியில் பிரதிபலிப்பு 'ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது. மேம்படுத்தப்பட்ட 'பிரேக் சிஸ்டம்' மற்றும் பைகளை எளிதாக எடுத்து செல்லும் வகையில் பெரிய கேரியர் பொருத்தப்பட உள்ளது.
தண்ணீர் பாட்டில், புத்தகம் வைப்பதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன. மாணவர்களுக்கு ராணுவ பச்சை நிறத்திலும், மாணவியருக்கு வெளிர் ஊதா நிறத்திலும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. சைக்கிள் வழங்கும் பணியை, டிசம்பர் மாத இறுதியில் தொடங்க, முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.