

சென்னை,
சென்னையில் 2-ம் கட்டமாக ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனை முதல்-அமைச்சர் விஜய் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மெட்ரோ ரெயில் மூலம் நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு விஜய் சென்றார். அங்குள்ள மெட்ரோ ரெயில் நிலைய தலைமையகத்தில் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார்.
நந்தனத்தில் ஆய்வு கூட்டத்தை முடித்துவிட்டு கார் மூலம் கிண்டி சென்றார். அங்குள்ள கத்திப்பாரா அருகே பட்ரோட்டில் இருந்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரையில் 6 தூண்களை ஒன்று சேர்க்கும் வகையில் 1,354 அடி தூரத்துக்கு 101 அடி உயரத்தில், 410 அடி ஆரத்துடன் கூடிய 'பேலன்ஸ்டு கேன்டிலீவர்' என்ற புதிய தொழில்நுட்பத்துடன் பிரமிப்பூட்டும் வகையில் மெட்ரோ வளைவு ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இதனை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டு, நவீன தொழில்நுட்பம் மற்றும் பணிகளின் சவால்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பணிகளை தரமாகவும், திட்டமிட்ட காலத்தில் முடிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் போரூரில் இருந்து டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் நவீன மெட்ரோ ரெயிலில் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு விஜய் சென்றார். அங்கு நடந்துள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த நிலையில், மெட்ரோ ரெயில் திட்டங்களை குறித்த காலத்துக்குள் முடிக்க பணிகளை துரிதப்படுத்துமாறு மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கத்திப்பாராவின் மெட்ரோ கட்டுமானம், ஆளில்லா மெட்ரோ ரெயில் இயக்கம் தொடர்பான முன்னெடுப்புகள் சிறப்பாக இருப்பதாகவும் முதல்-அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் மெட்ரோ கட்டுமானப் பணியில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பகலுக்கு மாற்றாக இரவு நேர கட்டுமான பணிகளை கூடுதலாக மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.