

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (6.7.2026), சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் இயங்கிவரும், நாளொன்றுக்கு 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் 5,814 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான குடிநீர், பூண்டி, சோழவரம், புழலேரி, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மூலமும், நெம்மேலியில் உள்ள 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலமும் நாளொன்றுக்கு 1230 மில்லியன் லிட்டர் குடிநீர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் தேவைக்கேற்ப, கூடுதலாகக் குடிநீர் வழங்கும் பொருட்டு, பேரூரில் 5814.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட, கடல்நீரைக் குடிநீராக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் நெம்மேலியில் இயங்கிவரும் நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின், கடல்நீரை உட்கொள்ளும் தொட்டியின் (Intake Sump) செயல்பாடுகளைப் பார்வையிட்டார். மேலும், நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையத்தின் (RO Building) செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள SCADA செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, பேரூரில் அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்புதிய நிலையத்தில், கடல்நீரை உட்கொள்ளும் கட்டமைப்பு (Intake Structure), செதிலடுக்கு வடிகட்டி (Lamella Clarifier), சவ்வூடு வெளியேற்றும் தெளிந்த நீர்த்தொட்டி (RO Permeate Tank), நடுநிலைப்படுத்தும் தொட்டி (Neutralization Pit), நீர்சேகரிப்புத் தொட்டி (Product water tank), சுத்திகரிக்கப்பட்ட நீர்சேகரிப்புத் தொட்டி (Clear water reservoir), கசடுகளைக் கெட்டிப்படுத்தும் தொட்டி (Sludge Thickener), நிர்வாகக் கட்டடம் (Admin Building), பண்டகசாலை (Warehouse), சுண்ணாம்பு செறிவூட்டும் நிலையம் (Limestone Filter), எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையம் (RO Building), எதிர்மறை சவ்வூடு பரவல் நீர்செலுத்தும் தொட்டி (RO Feed tank), காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி (Dissolved Air Flotation), புவிஈர்ப்பு ஈரடுக்கு வடிகட்டி நிலையம் (Gravity Dual Media Filter), இரசாயனக் கட்டடம் (Chemical Building), மின்சாரக் கட்டடம் (Electrical Building) மற்றும் தொழிற்கூடங்களுக்கான (Workshop) கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
கடல்சார் பணிகளாக, 2500 மில்லி மீட்டர் விட்டமுள்ள HDPE குழாய்கள் கடல்படுக்கையின் அடியில் பதிக்கப்பட்டுள்ளன. இதில், 1200 மீட்டர் மற்றும் 1210 மீட்டர் நீளமுள்ள 2 கடல்நீரை உட்கொணரும் குழாய்கள், 840 மீட்டர் நீளமுள்ள உவர்நீர் வெளியேறும் குழாய் ஆகிய குழாய்களைப் பதிக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. கடல்நீரை உட்கொணரும் கோபுரம் (Caisson), கடலில் பதிக்கப்பட்ட குழாய்களின் இறுதிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் குழாய்கள் பதிக்கும் பணிகளில் ஒரு பகுதியாக, நீரேற்று நிலையம் மற்றும் நீர்தேக்கத் தொட்டி கட்டமைப்பு அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள், பேரூரிலிருந்து போரூர் வரை 59 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2000 / 1800 / 1000 மி.மீ. விட்டமுள்ள குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, 41.51 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 12.36 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
இதில், ECR-லிருந்து கோவிலஞ்சேரி சந்திப்பு வரை மொத்தம் உள்ள 27.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 2000 மில்லி மீட்டர் விட்டமுள்ள குடிநீர்க் குழாய்கள் பதிக்கும் பணிகளில் இதுவரை 7.74 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகாமையிலுள்ள 20 ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள 22.67 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேரூரில் புதிதாக அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்த குறும்படத்தைப் பார்வையிட்டார்.
மேலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் நெம்மேலியில் இயங்கிவரும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை சிறந்த முறையில் பராமரித்து, பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றி தொடர்ந்து குடிநீர் வழங்கிட வேண்டுமென்றும், பேரூரில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார், சட்டமன்ற உறுப்பினர் பா. விஜயராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எம். வீரப்பன், சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் உ. பர்வீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.