

பெருந்துறை,
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தொழில் முனைவோருக்கான ரூ.3,000 கோடி வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைத்து, பல்வேறு வகையான வாழ்வாதார நிதியுதவிகள் மற்றும் அனுமதி ஆணைகளையும் முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் இன்று (3.11.2026) ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற விழாவில், மாநிலம் முழுவதும் 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தொழில் முனைவோருக்கான 3,000 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைக்கும் வகையில், 9,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,110 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்புகளை வழங்கினார்.
மேலும், பல்வேறு வகையான வாழ்வாதார நிதியுதவிகளையும், இளைஞர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி தொடங்குவதற்கான அனுமதி ஆணைகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் விற்பனை அங்காடிகள் அமைப்பதற்கான அனுமதி ஆணைகளையும் வழங்கினார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் பொருளாதார சுயசார்பிற்காகவும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பெண்களின் வாழ்வாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற இளைஞர் திறன் பயிற்சித் திட்டம் (DDU-GKY), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (TNULM) மற்றும் தமிழ்நாடு ஊரகத் தொழிற்காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்க மையம் (TN-RISE) ஆகிய பெரும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஊரகப் பகுதிகளில் செயல்படும் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி மற்றும் சுழல் நிதி ஆகியவை வழங்கப்படுகின்றன. கிராமப்புறப் பெண்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் நோக்கத்தில் பல்வேறு பண்ணைசார் மற்றும் பண்ணைசாரா வாழ்வாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சுய உதவிக் குழு மகளிர் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, நிலையான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி, வருமான வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், சிறுதானிய உணவகங்கள், மதி அனுபவ அங்காடிகள், கல்லூரிச் சந்தைகள், மண்டல / மாவட்ட / வட்டார அளவில் கண்காட்சிகள், உணவுத் திருவிழாக்கள் மற்றும் மதி இயற்கை சந்தை போன்ற பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், அவர்களின் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையவும் மதி என்ற வணிக முத்திரை உருவாக்கப்பட்டு, இணையவழி விற்பனை போன்ற பல்வேறு சந்தைப்படுத்தல் வழிகளின் மூலம் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் முக்கியத் திட்டங்களான அம்மா உணவகம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், போன்றவற்றில் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக, வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சித் திட்டமான தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டத்தின் (DDU–GKY) மூலமும், சுயதொழிலை ஊக்குவிப்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) மூலமும் இளைஞர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதுடன், வேலை தேடும் இளைஞர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், மாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண்களின் தொழில்முனைவுத் திறனுக்கு ஒரு புதிய கதவைத் திறந்து வைக்கும் வகையில், தமிழ்நாடு ஊரகத் தொழிற்காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்க மையம் (Tamil Nadu Rural Incubator and Startup Enabler – TN-RISE) மகளிர் ஸ்டார்ட்-அப் கவுன்சில் உருவாக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வங்கிக் கடன் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி இதுவரை 5.23 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 60 லட்சம் மகளிருக்கு சுமார் 2,62,311 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.
2026-27ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், 4,18,673 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பாக 38,000 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த இலக்கினை நிறைவு செய்திடும் வகையில், இதுவரை 1,70,624 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 16,560 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று பெருந்துறையில் நடைபெற்ற விழாவில், மாநிலம் முழுவதும் 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தொழில் முனைவோருக்கான 3,000 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைக்கும் வகையில், 9,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,110 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்புகளை வழங்கினார். இவ்விழாவினைத் தொடர்ந்து, ஓரிரு நாட்களில் மாநிலம் முழுவதும் 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் 3,000 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்புகளை விரைந்து வழங்கிடுமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பல்வேறு வாழ்வாதார நிதியுதவிகளான சமுதாய முதலீட்டு நிதி, நலிவுநிலை குறைப்பு நிதி, தொழில் முனைவோருக்கான சமுதாய தொழில் நிறுவன நிதி, பண்ணைசார் மற்றும் பண்ணை சாரா தொகுப்புகளுக்கான நிதி, கிராமப்புற வாழ்வாதார விரைவுப் போக்குவரத்துக்கான நிதி, தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டத்தின் (DDU–GKY) கீழ் நிறுவனங்களுக்கான பயிற்சிகள் தொடங்குவதற்கான அனுமதி ஆணைகள், சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை மேம்படுத்துவதற்கான ‘SHE Mart’ அனுமதி ஆணைகள், ‘மதி’ அனுபவ அங்காடிகளுக்கான அனுமதி ஆணைகள், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கக் கட்டடத்திற்கான அனுமதி ஆணைகள் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்கினார்.
முன்னதாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விழா நடைபெறும் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த “ஒரு வேர் எண்ணற்ற தொழில்கள்” என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடந்து வந்த 'வெற்றிப் பாதையை' நோக்கி தமிழ்நாட்டின் 40 ஆண்டுகால ‘பெண்மையின் பேரெழுச்சி’ என்ற புகைப்படக் கண்காட்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் அடங்கிய கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டு, சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.