

சென்னை
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய நிலையில், அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 10-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். தேர்தலில் விஜய், தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, முதல்-அமைச்சர் விஜய் இன்று மாலை தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார்.
தவெக ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக திருச்சிக்கு வருகை தந்துள்ள முதல்-அமைச்சர் விஜயை விமான நிலையத்தில் மதிமுக எம்.பி. துரை வைகோ, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஜோசப் கல்லூரி வரை முதல்-அமைச்சர் சாலை வலம் மேற்கொள்கிறார். முதல்-அமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் வழிநெடுக வரவேற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.