

வேலூர்,
வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
முதல்-அமைச்சரைப் பொறுத்தவரை, தொலைநோக்குச் சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறார். வரலாறு படைக்கும் தலைவராகவும், இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழும் தலைவராகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விளங்கி வருகிறார்.
வெற்றித் தலைவர், தமிழகத்தின் நிரந்தர முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில், அனைத்து துறைகளும் போட்டி போட்டுக்கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் சுழன்று பணியாற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் நேர்மையான ஆட்சியை நடத்துவதற்காக முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறார்.
முதல்-அமைச்சர் குறிப்பிட்ட ஒரே கருத்து, 'மக்களுடைய வரிப் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட இந்த அரசின் சார்பாக சிந்தாமல், சிதறாமல் பணிகள் நடைபெறும்' என்பதுதான். உணவு உற்பத்தியைப் பொறுத்தவரை, நமக்குத் தேவையாண அளவுக்கு மட்டுமல்லாமல், கூடுதலாகவே அனைத்து உணவுப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் இலக்காக, தற்போது நமக்குத் தேவையான உணவை இருமடங்கு அளவுக்கு உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்தந்த சிவில் சப்ளை கார்ப்பரேஷன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உணவைப் பொறுத்தவரை, நம்மிடம் தேவையான அளவுக்கு தானியங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் போதுமான அளவில் உள்ளன. எனவே, உணவுப் பொருட்களுக்கு எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
லண்டன் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கம்யூனிஸ்ட் தலைவர் கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "ஒரு தொழில் முதலீட்டாளர் இங்கு வருகிறார் என்றால், அதற்கான இடம் வேண்டும். தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். போக்குவரத்து வசதி இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். வெளியில் இருந்து அறிக்கை கொடுப்பது ஈஸி; கேட்பதும் ஈஸி. செயல்படுத்திப் பாருங்கள்; அப்போதுதான் தெரியும்" என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
"நிலவரி உயர்த்தும் திட்டம் உள்ளதா" என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தமிழ்நாட்டில் நிலவரி இல்லை. சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சரின் ஆணைப்படி, அவருடைய ஒப்புதலுடன் நிலவரி ரத்து செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.28 கோடி அளவிலான நிலவரி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலவரி என்பது விவசாயிகளுக்குத் தேவையில்லாதது' என அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனே பத்திரிகையாளர்கள் மொபைல் போனில் டார்ச் லைட் அடித்தனர். அந்த வெளிச்சத்தில் அமைச்சர் பேட்டி அளித்தார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு மின்சாரம் வந்தது.