முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு; சென்னையில் இன்று தொடங்குகிறது

மாநாட்டில் நடக்கும் 2-வது அமர்வில் கலெக்டர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கான மாநாடு சென்னையில் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு

த.வெ.க. ஆட்சி அமைந்து ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான மாநாடு இன்று (திங்கள்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக போலீஸ் டி.ஜி.பி. அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், சரக டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்கள், வனத்துறை உயர் அலுவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு

இந்த மாநட்டை 3 அமர்வுகளாக பிரித்து நடத்த முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். முதல் அமர்வில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் இணைந்து கலந்து கொள்கின்றனர். இந்த அமர்வில் முதலில் சட்டம் ஒழுங்கு தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வு, குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள், போலீஸ் நிர்வாகத்தின் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது.

அதில், உளவுத் தகவல்கள் சேகரிப்பு, பிடி ஆணைகளை செயல்படுத்துவது, தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடுவோர், ரவுடிகள், ஐாமீனில் உள்ளவர்களை பின்தொடர்ந்து சாதி பிரச்சினைகள் ஆகியவை முதலில் ஆய்வு செய்யப்படுகிறது.

போதை இல்லாத தமிழகம்

அதன்பின்னர், பெண்கள் பாதுகாப்பு, சிங்கப்பெண் அதிரடிப்படையின் செயல்பாடுகள், போக்சோ வழக்குகளின் நிலை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

அதன் பின்னர் போதை பொருள் இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் அதற்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்வி நிறுவனங்களில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கள்ளச்சாராயத்தை கடுமையாக ஒடுக்குவது, தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவை உள்பட பல்வேறு சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தடங்கல்கள் என்ன?

மாநாட்டில் நடக்கும் 2-வது அமர்வில் கலெக்டர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் அனைத்து அரசுத் துறைகளின் பயன்களும் மக்களுக்கு சென்றடைந்துள்ளதா? அதில் இருக்கும் தடங்கல்கள் என்ன? என்பது போன்ற அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.

3-வது அமர்வில் கலெக்டர்கள் மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். 2 நாட்களாக நடக்கும் இந்த அமர்வுகளின் நிறைவில் முதல் அமைச்சர் விஜய் உரையாற்றகிறார். அப்போது திறமையான செயல்பட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளை பாராட்டி பரிசுகளை வழங்குகிறார்.

மாநாட்டுக்கான முன்னேற்பாடு

இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் மு. சாய்குமார் தலைமையில் கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இன்று நடக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com