

சென்னை,
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்து 6 மாதங்கள் கடந்த நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், கொலை, கொள்ளை பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகவும் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க ஆளும் கட்சியினரின் செயல்பாடுகளும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன.
அந்த வகையில், துறையூர் எம்.எல்.ஏ.வும், துணை சபாநாயகருமான ரவி சங்கர், சில கோரிக்கைகளுடன் வந்த நபரை தாக்கியதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் இதன் காரணமாக ஆட்சியர் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த இரு விவகாரங்களும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
இந்த சர்ச்சைக்களுக்கு மத்தியில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் தலைமை வகிக்கிறார். கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று சம்பந்தப்பட்ட எம்எல்ஏ.க்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
இக்கூட்டத்தில் தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மீது கட்சி ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தக் கூட்டத்தில், எம்எல்ஏக்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதைத் தடுப்பது, பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது, கட்சியின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படாமல் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விஜய்யும், என்.ஆனந்தும் ஆலோசனை நடத்த உள்ளனர்.