அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாளை சந்திக்கும் முதல்-அமைச்சர் விஜய்

எடப்பாடி பழனிசாமி நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாளை சந்திக்கும் முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதையடுத்து, தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டசபை கூட்டம் நிறைவடைந்த உடன் முதல்-அமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் திமுக தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அனைவரையும் சந்தித்தார். அரசியல் நாகரீகம், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விசிக தலைவர் திருமாவளவனை இன்று சந்திக்கவில்லை.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் விஜய் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால், பிறந்தநாளன்று எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு நாளை காலை முதல்-அமைச்சர் விஜய் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com