கோவை செல்லும் முதல்-அமைச்சர் விஜய்; விமான நிலையம் முதல் காந்திபுரம் வரை ரோடுஷோ

கோவையில் புதிய திட்டங்கள் மற்றும் முடிவடைந்த திட்டங்களை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
கோவை செல்லும் முதல்-அமைச்சர் விஜய்; விமான நிலையம் முதல் காந்திபுரம் வரை ரோடுஷோ
Published on: 

சென்னை,

கோவை விமான நிலையத்தில் தொடங்கி காந்திபுரம் அறிவுலகம் வரை முதல்-அமைச்சர் விஜய் ரோடுஷோ செல்கிறார்.

பெரியார் நூலகம்

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகத்தின் திறப்பு விழா வருகிற 16-ந்தேதி (நாளை) நடைபெற உள்ளது. இந்த நூலகத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார்.

அங்கு பெரியார் சிலை மற்றும் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதற்காக பெரியார் நூலக வளாகத்தில் விழா மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோடு ஷோ

மேலும் கோவையில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் மற்றும் முடிவடைந்த திட்டங்களை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். முதல்-அமைச்சரின் கோவை பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் தொடங்கி காந்திபுரம் அறிவுலகம் வரை முதல்-அமைச்சர் விஜய் 11.4 கி.மீ. தூரத்துக்கு நாளை ரோடு ஷோ செல்ல உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரளா செல்லும் முதல்-அமைச்சர்

இதனிடையே கோவையில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் நாளை பிற்பகலில் கேரள மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கோவை அவிநாசி சாலை அருகே ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக முதல்-அமைச்சர் விஜய் திருச்சூருக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, விஜய் முதன்முறையாகக் கேரளாவுக்கு செல்கிறார். திருச்சூரில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் டி.எஸ். கல்யாணராமனின் இல்லத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பாலிவுட் நட்சத்திரங்களும் பிற முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com