முதல்-அமைச்சர் விஜய் 16-ந்தேதி டெல்லி பயணம்; மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை..?

காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கர்நாடகாவுக்கு உதவ வேண்டும் என டி.கே. சிவக்குமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோப்புப்படம்
Published on: 

சென்னை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், வருகிற 16-ந்தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு, மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடந்த 7-ந்தேதி கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டினால் ஏற்படும் பாதிப்புகளை குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாது அணை கட்ட, எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

டி.கே. சிவக்குமார் பேச்சு

இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை என கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக, பெங்களூருவில் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கர்நாடகா அரசு தனது சொந்த நிலத்தில் அணை கட்டிக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனையை நாங்கள் கடைப்பிடிபோம்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் சட்டத்தை நன்கு அறிந்திருப்பார் என்று நம்புகிறேன். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை.

பா.ஜ.க. ஆதரவு

மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கே அதிக பயன் கிடைக்கும். வறட்சி காலங்களில் நீரை சேமித்து வைக்கும் நீர்த்தேக்கமாக இத்திட்டம் செயல்படும். இத்திட்டத்திற்கு கர்நாடாகாவில் பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆதரவாக உள்ளனர்.

வனத்துறை நிலத்திற்கு பதிலாக, தற்போது வேறு 5,400 ஹெக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் மோதல் போக்கை கைவிட்டு, இத்திட்டத்திற்காக இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தமிழக அரசு அனுமதிக்காது

அணை திட்டம் குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் ஒரு குழுவை கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறினார்.

எனினும், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எந்த சூழலிலும், நாங்கள் அனுமதிக்கமாட்டோம். டி.கே. சிவக்குமார் கூறுவது போன்று எதுவும் நடக்காது என்று தமிழக கிராமப்புற வளர்ச்சி மற்றும் நீர்வள துறைக்கான அமைச்சர் என். ஆனந்த் சமீபத்தில் கூறினார். இந்த திட்டத்தினை தமிழக அரசு அனுமதிக்காது என்றும் நிருபர்களிடம் அவர் கூறினார்.

ரூ.15,600 கோடி

இந்நிலையில், கர்நாடகாவுக்கு ரூ.15,600 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்றார். அப்போது அவர் முன்னிலையில் டி.கே. சிவக்குமார் பேசும்போது, மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்து பேசினார். அவர் பேசும்போது, மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை அளித்து விட்டது.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டே தீரும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சட்ட ரீதியாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல்களை மத்திய அரசு தரவேண்டும். இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கர்நாடகாவுக்கு உதவ வேண்டும் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் 16-ந்தேதி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில், பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X