

திருச்சி,
முதல்-அமைச்சர் விஜய் திருச்சிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறார். அவர் பிரமாண்ட 'ரோடுஷோ'வில் பங் கேற்பதுடன் நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கிறார்கள். வரவேற்பு முடிந்த பின்னர் அவர் சாலை மார்க்கமாக வேனில் திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்.
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நவீன வசதிகளுடன் ரூ.134 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 தளங்களாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இந்த புதிய கட்டிடத்தில் 600 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் முதல்-அமைச்சர் விஜய் அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் வார்டுக்கு சென்று அங்கு தாய்மாமன் சீர் திட்டத்தின் கீழ் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்படும் விஜய் திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நடத்தப்பட்டு வரும் அரசு ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் மாவட்டத்தில் நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையத்திற்கு செல்கிறார். மதியம் 1 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
விமான நிலையத்தில் இருந்து புத்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும்போதும், அரசு மருத்துவமனையில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடமான தமிழ்நாடு ஓட்டலுக்கு செல்லும்போதும் முதல்-அமைச்சர் விஜய் சுமார் 16 கி.மீ. தூரத்திற்கு பிரமாண்ட 'ரோடுஷோ' நடத்துகிறார். இதற்காக திருச்சி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன் உள்ளிட்ட இடங்களில் நேற்றே சாலையோர தடுப்புகள் கொண்டு வந்து அவற்றை நிலை நிறுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.