மு.க. ஸ்டாலின் பெயரை பார்த்தாலே முதல்-அமைச்சர் விஜய்க்கு உதறுகிறது - தா.மோ. அன்பரசன்

முதல்-அமைச்சர் விஜய்க்கு ஒன்று சொல்லி கொள்கிறோம் ஸ்டிக்கர் மீது வைக்கும் நம்பிக்கைக்கு பதிலா நல்ல திட்டங்களை கொடுங்கள் என தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
தா.மோ. அன்பரசன்
Published on

சென்னை,

மு.க. ஸ்டாலின் பெயரை பார்த்தாலே முதல்-அமைச்சர் விஜய்க்கு உதறுகிறது என தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் தி.மு.க தலைவர் பெயரை மறைப்பது, திமுக திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டுவது என அநாகரிக அரசியல் செய்யும் தவெக அரசை கண்டித்து தா.மோ. அன்பரசன் பேட்டி.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

கடந்த திமுக ஆட்சியில் நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகை 24. 2. 2024 அன்று முன்னாள் முதல்-அமைச்சர் திமுக தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நிலையத்திலிருந்து பெறப்படுகின்ற குடிநீர் சென்னை மட்டுமல்லாது, சென்னை புறநகர் பகுதியில் இருக்கிற செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் செயல்படுத்தப்பட்டது.

20 லட்சம் மக்கள்

நிலையத்தின் மூலம் தென்சென்னை பகுதியில் அடங்கியிருக்கிற ஆலந்தூர் புனிததோமயர்மலை, மூவரசம்பட்டு, பல்லாவரம், கீழக்கட்டளை அதேபோல வேளச்சேரி, உள்ளகரம், புழுதிவாக்கம் , மடிப்பாக்கம் , கோவிலம்பாக்கம், நன்மங்கலம் ஆகிய பகுதிகளில் வசிக்கிற 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தினமும் தண்ணீர் தர வேண்டும் என்ற நல்லநோக்கில் அந்த திட்டம் தொடங்கி வைக்கபட்டது.

அப்படி தொடங்கப்பட்ட திட்டத்திற்கான கல்வெட்டும் அப்போது அதனருகே திறந்து வைக்கபட்டிருந்தது. தற்போதைய முதல்-அமைச்சர் இன்று ஆய்வுக்கு செல்கிறார் என மூன்று நாட்களுக்கு முன்பாகவே கம்பீரமாக நின்ற அந்த கல்வெட்டை துணியால் மூடி ஸ்டாலின் பெயரை எல்லாம் நீக்கி உள்ளனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது கல்வெட்டு சிதிலம் அடைந்துள்ளதாகவும் ஒருவாரத்தில் சரி செய்து கொடுப்பதாகவும் கூறி உள்ளனர்.

போராட்டம் நடைபெறும்

இன்னும் ஒருவாரத்தில் மீண்டும் பழைய படி கல்வெட்டு சீரமைக்கப்படவில்லை என்றால் மாவட்ட திமுக சார்பில் மாபரும் போராட்டம் நடைபெறும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன். இதுபோல பல இடங்களில் நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை மறைப்பதும், அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதும் நடந்து வருகிறது. இது மிக மிக கண்டிக்கத்தக்கது.

50 நாள்

இவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்து 50 நாள் ஆனது இதுவரை இன்னும் அவர்களுடைய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. எனவே இதுபோன்ற வேலைகளை விட்டுவிட்டு புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர்

டிஎன்பிஎஸ்சி மூலம் 41 பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள் அதுவும் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது தான். அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் மட்டும்தான் இவர்கள் கொடுத்தது. பத்திரப்பதிவு துறையில் 3.0 கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவர தயாராக இருந்தது அதையும் இவர்கள் கொண்டுவந்தது போல பரப்புராங்க. இது மாதிரி திமுக ஆட்சியில் நாங்க கொண்டு வந்த திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி அவர்கள் விளம்பரம் செய்யறாங்க தவிர புது திட்டங்கள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

சாதனை

எங்கள் தலைவர் ஸ்டாலினின் 50 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகளை எல்லாம் 5 ஆண்டுகளில் செய்து காட்டினார். இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்ற தகுதியை உருவாக்கிக் காட்டினார். இன்று அவரது பெயரை கல்வெட்டில் இருந்து எடுத்துட்டா அவர் பெயர் மறைந்துவிடும் என நினைக்கிறாங்க ஆனா ஒவ்வொரு மக்களின் மனதிலும் கல்வெட்டாக பதிந்திருக்கிறார் எங்கள் தலைவர். கல்வெட்டில் நீக்கினாலும் மக்கள் மனதில் இருந்து எங்கள் தலைவர் முக. ஸ்டாலின் பெயரை நீக்க முடியாது.

மகளிர் உரிமை திட்டம்

இன்றும் தொடரும் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமை பெண், தமிழ் புதல்வன், காலை உணவு திட்டம் இப்படி அனைத்து திட்டங்களும் எங்கள் தலைவர் பெயரை தான் சொல்லிக்கொண்டு உள்ளன. இந்த திட்டங்கள் எல்லாம் இருக்கிற வரையில் மக்கள் மனதில் இருந்து எந்த காலத்திலும் தலைவருடைய பெயரை புகழை அழிக்க முடியாது. அதேபோல நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டார்கள். பெயரை மாற்றுவது கூட கவலை இல்லை ஆனால் அந்த வெப்சைட்டில் இருக்கக்கூடிய மாணவர்களின் வீடியோக்களை எல்லாம் நீக்கி விட்டார்கள்.

விஜய்க்கு உதறுது

மு.க. ஸ்டாலின் பெயரை பார்த்தாலே முதல்-அமைச்சர் விஜய்க்கு உதறுது அதனால் தான் அவர் பெயர் உள்ள கல்வெட்டுகளை மறைத்து வருகிறார். முதல்-அமைச்சர் விஜய்க்கு ஒன்று சொல்லி கொள்கிறோம் ஸ்டிக்கர் மீது வைக்கும் நம்பிக்கைக்கு பதிலா நல்ல திட்டங்களை கொடுங்கள். அதை விடுத்து எங்களின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது , கல்வெட்டுகளில் எங்கள் தலைவரின் பெயர் நீக்குவது போன்ற செயல்கள் தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com