

கரூர் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: இன்று காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஒரு கனத்த மனதுடன்தான் சென்றேன். கரூர் கொடுந்துயர் நிகழ்வில் பாதிக்கப்பட்ட எமது மக்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலி, வேதனை, இழப்பு, போராட்டம் அனைத்தையும் உணர்ந்திருக்கிறேன். அரசின் இந்த எளிய ஆதரவு என்பது எமது மக்கள் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கும் என்றாலும் அவர்களின் பேரிழப்பை ஈடு செய்ய முடியாது. அவர்கள் இழந்த உறவுகளை எந்த உதவியாலும் திரும்பக் கொண்டு வர முடியாது. அவர்கள் இதயத்தில் கனக்கும் துயரை இந்த தருணம் இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். அவர்களை எப்படி மீண்டும் எதிர்கொள்வது என்ற தயக்கத்துடன் தான் உள்ளே நுழைந்தேன்
நினைத்ததுபோலவே எமது மக்களில் பலர் முதலமைச்சர் அவர்களிடமிருந்து பணி நியமன ஆணையைப் பெரும்போதே கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதனர். அந்த இடத்தில் நாமும் அழுதுவிடாமல் உணர்சிகளை கட்டுக்குள் வைப்பதற்கு போராட வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் முதலமைச்சரே கலங்கி கண்ணீர்விடக்கூடிய சூழல் உருவாகிவிட்டது. அதிகாரத்தின் திரையை அகற்றி, ஒரு சக மனிதனின் துயரை உணர்ந்த சக மனிதராக அவர் அழுதுகொண்டிருந்தார். நிகழ்ச்சி சில மணித்துளிகள் நின்று மீண்டும் துவங்கியது.தனியாக பேச வேண்டும் என்று கேட்ட குடும்ப உறுப்பினர்களை அழைத்துவரச் சொல்லி அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசி ஆறுதல் கூறினார்.
உணர்வுகளை எல்லாம் தாண்டி வாழ்வின் கொடிய எதார்த்தம் எமது மக்களை தினமும் சுட்டுக்கொண்டிருக்கின்ற சூழலில் முதலமைச்சர் அவர்களின் இந்த ஆதரவு எமது மக்களுக்கு நிச்சயம் பேருதவியாக இருக்கும்.எல்லாவற்றிற்கும் மேலாக "நான் உங்களுடன் இருக்கிறேன், எப்போதும் துணையாக இருப்பேன்" என்ற நம்பிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எமது மக்களுக்கு அளித்த தருணமாகவும் அது அமைந்தது.இதற்காக எமது மக்களின் சார்பாக ஜோசப் விஜய்க்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் எப்போதும் உறுதியாக நிற்போம். குறிப்பாக பெற்றோரை இழந்து எதிர்காலத்தை எதிர்நோக்கும் குழந்தைகளின் வாழ்க்கைப் பயணத்தில் அவர்களுக்கு துணையாக இருப்பது நமது பொறுப்பும் கடமையும் என்பதை உணர்ந்துள்ளோம். காலம் அவர்கள் காயங்களை ஆற்றற்றும்” என்று பதிவிட்டுள்ளார்.