

சென்னை,
தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், விழா நிகழ்விடமான நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு காலை 8.48 மணிக்கே முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்தார். மறுநாள் (11-ந் தேதி) காலை 9.30 மணிக்கு சட்டசபையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழாவுக்கு காலை 8.45 மணிக்கே தலைமைச் செயலகம் வந்தார்.
12-ந்தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் சட்டசபையில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள 8.55 மணிக்கு விஜய் அவைக்கு வந்தார். அடுத்த நாள் (13-ந்தேதி) காலை 9.30 மணிக்கு சட்டசபையில், அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்க காலை 9 மணிக்கே முதல்-அமைச்சர் விஜய் தலைமைச் செயலகம் வருகை தந்தார்.
3 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் தனது வழக்கமான பணியை மேற்கொள்ள முதல்-அமைச்சர் விஜய் தலைமைச் செயலகம் வந்தார். அரசு ஊழியர் போல காலை 9.55 மணிகே தலைமைச் செயலகம் வருகை தந்த முதல்-அமைச்சர் விஜய், மாலை 4 மணி வரை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மதிய உணவையும் காலையிலேயே கையோடு கொண்டுவந்த அவர், தலைமைச் செயலகத்திலேயே தனது அறையில் உணவு சாப்பிட்டார். பின்னர், மாலை 4 மணிக்கு, தனது பணிகளை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் விஜய் வீடு திரும்பினார். அரசு ஊழியர் போல், அவர் வந்து சென்றதற்கு அதிகாரிகள், போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.