திருச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி: 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், மூத்த குடிமக்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி
Published on

சென்னை,

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். தேர்தலில் த.வெ.க. பெற்ற வெற்றியை தொடர்ந்து விஜய் கடந்த 10-ந்தேதி தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். ஒருவர் 2 தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக முதல்-அமைச்சர் விஜய் வெளியூர் சுற்றுப்பயணமாக நாளை (திங்கட்கிழமை) திருச்சிக்கு வருகிறார். திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார்.

இந்நிலையில் திருச்சியில் நாளை முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், கட்சியின் பொதுச் செயலாளருமான என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதி

இதுதொடர்பாக த.வெ.க. தலைமை நிலையச் செயலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நாளை (01.06.2026) திங்கள்கிழமை, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது.

காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.

குடிநீர், மருத்துவ வசதி

காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்.

QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com