

சென்னை,
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்கள் யாருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. இதனால் அரசு துறைகளின் முக்கியமான கோப்புகள் கையெழுத்திடப்படாமல் இருந்து வருகின்றன.
இந்த சூழலில் இன்று முதல்-அமைச்சரின் தனி செயலாளர் செந்தில்குமார், கவர்னர் மாளிக்கைக்கு சென்று தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம், நிர்வாக விவகாரங்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவர்னரை சந்தித்த பிறகு, நீலாங்கரையில் உள்ள முதல்-அமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு செந்தில்குமார் சென்றார். மேலும், த.வெ.க.வின் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியும் நீலாங்கரை இல்லத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், முதல்-அமைச்சரின் இல்லத்தில் நடைபெறும் முக்கிய ஆலோசனையில், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.