

திருச்சி,
தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை முதல்-அமைச்சர் விஜய் விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார். அவர் சென்ற விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியதை தொடர்ந்து, அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக புதுக்கோட்டை புறப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை த.வெ.க. மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு சுமார் 49 கி.மீ. தூரம் தனது வாகனத்தில் சாலை மார்க்கமாக முதல்-அமைச்சர் விஜய் பயணம் செய்தார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டையில் ரூ. 23 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நவீன பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கிறார். பின்னர், ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் விழாவில் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் வழங்குகிறார். முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி புதுக்கோட்டையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.