மாநகரப் பேருந்தில் பயணம் செய்த முதல்-அமைச்சர்: விடியல் பயணத் திட்டம் குறித்து பயணிகளிடம் உரையாடினார்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து “மகளிர் விடியல் பயணத் திட்டம்” குறித்து பயணிகளிடம் உரையாடினார்.
மாநகரப் பேருந்தில் பயணம் செய்த முதல்-அமைச்சர்: விடியல் பயணத் திட்டம் குறித்து பயணிகளிடம் உரையாடினார்
Published on

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இன்று பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள விழாவிற்கு செல்லும் வழியில், 32-B மாநகரப் பேருந்தில் அரசினர் தோட்டம் அருகில் உள்ள ஓமந்தூரார் பேருந்து நிறுத்தத்திலிருந்து பயணம் செய்தார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாள் அறிவித்த 5 திட்டங்களில் ஒன்றான "மகளிர் விடியல் பயணம் திட்டத்தின்" கீழ் பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் உரையாடினார்.

அப்போது, பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெண் பயணிகள் இந்த "மகளிர் விடியல் பயணம் திட்டம்" மூலம் நாங்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு வருவதால், நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடிகிறது என்றும், இதனால், மாதம் 2,000 ரூபாய் வரையில் சேமித்து வைக்க முடிகிறது என்றும், அந்த சேமிப்புத் தொகையிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்கான படிப்பு செலவுகளுக்கும், மருத்துவ செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பயன் பெறும் பெண்களுக்காக முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், பேருந்தின் முழு கொள்ளளவு பயணிகளோடு பேருந்து பயணத்தை தொடர வேண்டும் என்றும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com