

சென்னை,
சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி விஜய் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மண்டல மாநில அளவில் நடத்தி வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியானது, அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபட செய்யும் மிகச்சிறந்த முயற்சியாகும். இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை பாராட்டி, அவர்களை ஊக்குவித்து, உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது. இந்த போட்டிகளில் முக்கிய நோக்கமாகும்.
இதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் அக். 15-ம் தேதி முதல் நடத்தப்பட்ட மாநில அளவிலான ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளில் பங்கேற்றனர்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னை நேரு விளையாட்டரங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா தொடங்கி நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் சென்னை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், முதல்-அமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மாவட்ட அணிக்கும் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் 'முதலமைச்சர் கோப்பை 2026' நிறைவு விழா தொடங்கியது. இதில் முதல்-அமைச்சர் விஜய், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் மரியவில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா துவக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “ட்ரீம்ஸ் ஒலிம்பிக்ஸ் என்ற குறிக்கோளுடன் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டுத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தான் முதல்-அமைச்சர் விஜய் அதிகமாக பங்கெடுத்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக 27 லட்சம் பேர் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இது முதல்-அமைச்சரின் வெற்றி.
அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் அமைக்க வேண்டும், கிட்டத்தட்ட 30,000 பேரை விளையாட்டு விடுதிகளுக்கு கொண்டு வர வேண்டும் என்பது நம்முடைய கனவு. தமிழ்நாட்டில் ரூ.83 கோடி முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது.
ஒரே ஒரு ஒலிம்பிக் பதக்கம் வெல்லுங்கள்; உலகின் நம்பர் 1 ஆக நீங்கள் மாறும்போது, ஒட்டுமொத்த பொருளாதாரமும் தமிழ்நாட்டையும் உங்களையும் தேடி வரும். 1994ம் ஆண்டுக்குப் பிறகு மைதானங்கள் கட்டப்படவில்லை. உலகத்தரத்தில் ஒலிம்பிக்ஸ் நகரத்தை உருவாக்க முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார். நாம் சாதாரணமாக ஜெயிக்கக்கூடாது. ஒரு வரலாற்றை உருவாக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் கூறுவார்” என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்ற துளசிமதி முருகேசனுக்கு முதல்-அமைச்சர் விஜய் ரூ.1.75 கோடிக்கான காசோலையை வழங்கினார்
பாரா பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிவராஜன் சோலைமலைக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். தொடர்ந்து, சிவராஜன் சோலைமலையின் குடும்பத்தினருடன் முழங்காலிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதலமைச்சர் கோப்பை 2026ல் 3ஆம் இடத்தை பிடித்த கோயம்புத்தூர் மாவட்ட அணிக்கும், 2-ம் இடத்தை பிடித்த செங்கல்பட்டு அணிக்கும், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கும் முதல்-அமைச்சர் விஜய் கோப்பைகளை வழங்கினார்.
இதனிடையே சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில், முதல்-அமைச்சர் விஜய்க்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நினைவுப் பரிசு வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஒலிம்பிக் நீர்விளையாட்டு அகாடமியை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு வளாகத்தையும் முதல்-அமைச்சர் விஜய் திறந்துவைத்தார்.