மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 5 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை நேற்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் கவலை அளிக்கக் கூடிய வகையில் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள முதல்-அமைச்சர், 22.02.2025 அன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் 23.02.2025 அன்று கைது செய்யப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று தான் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் இன்னும் அதிக அளவில் தொடர்வதாகவும், இந்த ஆண்டில் மட்டும், எட்டு வெவ்வேறு சம்பவங்களில் 119 மீனவர்களும், 16 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், நமது மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இக்கூட்டத்தைக் கூட்டி நிரந்தர தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விரைவில் விடுவிக்கவும் வலுவான தூதரக முயற்சிகளை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com