தமிழக அரசு தலைமை காஜி மரணம்

தலைமை காஜி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு தலைமை காஜி மரணம்
Published on

சென்னை,

தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் நேற்று (சனிக்கிழமை) இரவு 9 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. வயது முப்பு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் காலமானார்.

அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி. பட்டங்கள் பெற்றுள்ளார். இவர் தலைமை காஜியாக பதவியேற்பதற்கு முன்பாக கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அவரின் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சம்ஜூதீன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் சாகிபு மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார்.தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு, என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர். மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம்.அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com