அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தலைமைச்செயலாளர் ஆய்வு

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு கட்டப்பட்டு வரும் தொழிற்கூடங்களை அவர் பார்வையிட்டார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தலைமைச்செயலாளர் ஆய்வு
Published on

சென்னை,

தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தால் ரூ.60.55 கோடியில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 112 குறு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் உள்ளவாறு தொழிற்கூடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 1.31 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் தரைதளம் மற்றும் 4 மாடிகளுடன் கூடிய இந்த கட்டிடம் வருகிற செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.

இந்த கட்டிடத்தையும், அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.29.5 கோடியில் 5 மாடிகளுடன் கூடிய சுமார் 800 புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்கி பணிபுரியும் வகையிலான தொழிலாளர் தங்கும் விடுதி கட்டுமான பணிகளையும் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

கலந்துரையாடல்

இதையடுத்து, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்துடன் கலந்துரையாடி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை களைய இறையன்பு உத்தரவாதம் அளித்தார். பின்னர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.47.62 கோடியில் அமைக்கப்பட உள்ள துல்லியமான உற்பத்திக்கான மாபெரும் தொழில் குழுமங்களுக்கான திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், அதற்கான இடத்தினையும் அவர் ஆய்வு செய்தார்.

மர வேலைகள் அலகு

மேலும், தமிழ்நாடு அரசால் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியங்களால் பயனடைந்த பெண் தொழில் முனைவோர், ஆதிதிராவிட தொழில் முனைவோர் மற்றும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களால் நடத்தப்படும் தொழில் அலகுகளை அவர் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து அத்திப்பட்டில் தமிழ்நாடு அரசின் கேர்ஸ் (கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம்) திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மானியம் பெற்று நடத்தப்படும் 'ஓம் நமசிவாயா' என்ற லேசர் கட்டிங் நிறுவனத்தையும்,

அய்யனம்பாக்கத்தில் பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் மானிய உதவியுடன் நிறுவப்பட்டுள்ள 'ஸ்ரீசாய் இண்டீரியர்' (மர வேலைகள்) அலகு, பூந்தமல்லியில் பி.எம்.எப்.எம்.இ. திட்டத்தின் (உணவு பதப்படுத்துதலை ஊக்குவிக்கும் திட்டம்) கீழ் மானிய உதவியுடன் நிறுவப்பட்ட 'நம்ம எண்ணெய்' அலகு, திருமுடிவாக்கத்தில் உள்ள 'இன்போகஸ்' நிறுவனத்தின் பி.சி.பி. (பிரின்டட் சர்க்யூட் போர்ட்) தயாரிக்கும் அலகு மற்றும் 'தியாகராஜா மெஷினிங்' ஒர்க்ஸ் என்ற அலகினையும் இறையன்பு பார்வையிட்டார்.

இந்த நிகழ்வுகளின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண்ராய், சிட்கோ மேலாண்மை இயக்குனர் எஸ்.மதுமதி, தொழில் வணிகத்துறையின் கூடுதல் இயக்குனர் இரா.ஏகாம்பரம், மண்டல இணை இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com