சிட்லபாக்கம் கால்நடை ஆஸ்பத்திரியில் தலைமைச் செயலாளர் ஆய்வு

சிட்லபாக்கம் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அப்போது, கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
சிட்லபாக்கம் கால்நடை ஆஸ்பத்திரியில் தலைமைச் செயலாளர் ஆய்வு
Published on

தரமான சிகிச்சை

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி மையம் மற்றும் பொத்தேரி காட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கோழிப்பண்ணையில் நாட்டுக்கோழி வளர்ப்பினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, செல்லப்பிராணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். மேலும், தரமான சிகிச்சையை புதிய தொழில்நுட்பத்துடன் உடனுக்குடன் வழங்கிட அறிவுரை வழங்கினார்.

இதேபோல, மாதம் 2 முறை கால்நடைகளுக்கான மருத்து முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும். கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் மாநகராட்சியின் மூலம் விளம்பரம் செய்ய வேண்டும். கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் கால்நடைகள் பற்றிய சுவர் ஓவியங்கள் வரைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

திட்ட அறிக்கை

இதையடுத்து பொத்தேரி காட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு நாட்டுக்கோழி பண்ணையில் வளர்க்கப்படும் கடக்நாத், வனராஜா, அசீல், நிக்கோபாரி கோழி இனங்கள், ஜப்பானியக் காடை, வான்கோழி மற்றும் கினிகோழி வளர்ப்பு குறித்து ஆய்வு செய்தார்.

இந்த கோழிப்பண்ணையை விரிவாக்கம் செய்ய நடப்பாண்டு ரூ.5 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பண்ணை கண்காணிப்பு அலுவலக கட்டிடம், கூடுதல் குஞ்சு பொரிப்பகம், விவசாயிகள் பயிற்சி கூடம் ஆகியவை உருவாக்கப்பட உள்ளது. எனவே, பண்ணையில் உள்ள அனைத்து காலியிடங்களை உபயோகப்படுத்த ஏதுவாக பண்ணையை விரிவாக்கம் செய்திட திட்ட அறிக்கை தயாரித்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கூடுதல் செயலாளர் முகமது நசிமுத்தின், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் லட்சுமி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com