சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் சாலை பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற சாலை பராமரிப்பு பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் சாலை பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 போக்குவரத்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீரமைத்து சரிசெய்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் ரூ.1.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை நேற்று தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், டி.சினேகா, சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

உணர்வு பூங்கா

இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் இறையன்பு, சாலையை சரி செய்யும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் சாலை பணிகளை மேற்கொள்ளும் போது பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து புதிய சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் சாலை உயரமாவது தடுக்கப்படுகிறது. மேலும், சாலையோரமுள்ள குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களில் பருவ மழை காலங்களில் நீர் புகாமலும் தடுக்கப்படுகிறது.

முன்னதாக சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-172ல் அமைக்கப்பட்டுள்ள உணர்வு பூங்காவில் ரூ.2.23 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், வார்டு-175ல் ரூ.9.41 கோடியில் நடைபெற்று வரும் பூங்கா பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பழைய சாலைகளை அகழ்ந்தெடுக்காமல் புதிய சாலைப்பணிகளை மேற்கொண்டால் 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com