ஆவின் பால் பண்ணையில் தலைமை செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு

சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட தலைமை செயலாளர் இறையன்பு விற்பனையை உயர்த்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆவின் பால் பண்ணையில் தலைமை செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு
Published on

சென்னை:

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சார்பில் சென்னையில் அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் பால் மற்றும் பால் உப பொருட்கள் பால் பண்ணைகள் செயல்படுகிறது. இந்தநிலையில் சோழிங்கநல்லூரில் உள்ள பால் பண்ணையில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று 'திடீர்' ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, சூரிய மின் உற்பத்தியை பயன்படுத்துவதை அதிகப்படுத்தி மின்சார செலவினங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பாலகங்களில் குழந்தைகள் விரும்பும் பால் பொருட்களை பாலகத்தின் முன் பகுதியில் காட்சிப்படுத்தி விற்பனையை அதிகப்படுத்த வேண்டும், ஒவ்வொரு வாரமும் பணிக்குழு அமைத்து நிறுவனத்தின் மேம்பாட்டுக்கான மற்றும் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான சிறந்த ஆலோசனைகள் கூறும் அதிகாரிகளுக்கு பரிசு-பாராட்டு சான்றிதழ் அளித்து ஊக்கப்படுத்த வேண்டும் போன்ற அறிவுரைகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு வழங்கினார்.

மேலும் ஆவின் ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டங்களை அவ்வப்போது நடத்தி அவர்களிடையே நிறுவனத்தின் பொருட்கள் பற்றியும் மற்றும் முன்னேற்றத்துக்கான விவரங்களை பற்றி கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து பண்ணைக்கு பால் ஏற்றி வரப்பட்ட டேங்கர் லாரிகளில் பாலின் தரம் பரிசோதனை செய்யப்படுவது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாடு கமிஷனர் - ஆவின் மேலாண்மை இயக்குனர் ந.சுப்பையன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com