புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்..!

மக்கள் மனுக்களுடன் மாநில தலைநகருக்கு படையெடுக்கும் சூழலை தவிர்க்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்..!
Published on

சென்னை,

தலைமை செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஆட்சிப் பணியில் பலரும் இணைவதற்கு ஆட்சித் தலைவர் பணியே அச்சாரமாக அமைந்திருக்கிறது. அதுவே பலரையும் இப்பணிக்கு ஈர்க்கும் உந்து சக்தியாகவும் விளங்குகிறது. இப்பணியில் நீங்கள் ஆற்றும் அரும்பணிகளையே வாழ்நாள் முழுவதும் அசைபோட்டு மகிழ்ச்சியடைவீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

உங்களை மாவட்ட அளவில் அரசாங்கமாக மக்கள் உருவகப்படுத்தும் உன்னத நிலையில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணத்தில் இத்தகைய பொறுப்பை நீங்கள் ஏற்றிருக்கிறீர்கள். நீங்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டிய இனங்களைப் பட்டியலிட்டு உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படுகிற குறை தீர்க்கும் நாளில் பெறப்படுகிற மனுக்களின்மீது உரிய நடவடிக்கை எடுத்து அவற்றிற்கும் தீர்வு காண்பது மிகவும் முக்கியம். அத்தீர்வு பிரச்சினைக்கான முடிவாக இல்லாமல் விடிவாக இருக்க வேண்டும் உங்களிடம் அளிக்கப்படுகிற மனுக்கள் அவைகளின் கவலைகளையும் ஏழைகளின் துயரங்களையும் எளியவர்களின் கண்ணீரையும் தாங்கி வருகின்றன என்பதை உணர்ந்து அவற்றை ஈர இதயத்தோடு பரிசீலித்து ஒவ்வொரு மனுவையும் நம்முடைய உறவினர் அளித்த மனுவாய் கருதி பரிசீலித்து அவற்றில் அவர்களுக்கு சாதகமாக முடிவெடுக்க முடிந்தால் செய்து தருவதும், இயலாதபோது எவ்வாறு அணுகலாம் என்பதை பகிர்ந்தும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் குறை தீர்க்கும் நாட்கள் நெஞ்சத்தை நிறைவாக்கும் நாட்களாக வளர்ச்சியடையும்.

திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் நடத்தப்பட வேண்டிய கூட்டங்களைப் பட்டியலிட்டு ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும். சிலர் வாரம் முழுவதும் கூட்டங்களைப் பரவலாக்கி அடிக்கடி அலுவலர்களை வரவழைத்து அவர்கள் களப் பணி செய்யாமல் ஆட்சியரகத்திலேயே தவமிருக்கும்படி செய்து அவர்கள் நேரத்தை வீணடிப்பதுண்டு. அதைத் தவிர்த்து, திங்களோடு கூட்டங்களை முடித்துக்கொண்டு, 'அவர்கள் அலுலவக பணிகளையாற்ற விடுவிப்பது அவசியம்.

அதற்குப் பிறகு, அவர்களை ஆய்வுப் பணியிலோ முகாமின்போதோ களப் 'பணிகளிலோ சந்திப்பதே சாலச் சிறந்தது வாரத்தின் மற்ற நாட்களை தணிக்கை செய்யவும்.கள ஆய்வு செய்யவும் பயன்படுத்த வேண்டும். அலுவலக கோப்பில் அகப்படாத செய்திகள் களப் பணியின்போது கண்களில்படும். மக்களைச் சந்தித்தாலே அவர்கள் துயரங்கள் பாதி தீர்ந்ததாக உணர ஆரம்பித்துவிடுவார்கள். களத்தில் சகதியிலும், சேற்றிலும் தங்களைக் காண வருகிற அலுவலர்களையே மக்கள் மனதில் வைத்துப் போற்றுகிறார்கள்.

மாவட்ட அளவிலேயே பெறப்படுகிற மனுக்களில் அதிக கவனம் செலுத்தி குறைகளை களைந்தால், தேவையில்லாமல் மக்கள் மனுக்களை எடுத்துக்கொண்டு மாநில தலைநகருக்கு படை எடுக்கும் சூழல் ஏற்படாது. எந்த மாவட்டம் குறைவான அளவிற்கு முதல்வரின் முகவரிக்கு மனுக்களை அனுப்பும் வகையில் செயல்படுகிறதோ அதுவே சிறந்த மாவட்ட நிர்வாகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

உழவர்கள் குறை தீர்க்கும் நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை அவற்றை மாவட்ட தலைநகரிலேயே நடத்தாமல் பல்வேறு இடங்களில் சுழற்சி முறையில் நடத்துவது அப்பகுதியை சார்ந்த உழவர்கள் பெருமளவிற்கு கலந்து கொள்வதற்கு வாய்ப்பை வழங்கும். இதன்மூலம் கடைக்கோடியில் இருக்கும் சிற்றூரைச் சார்ந்த உழவரும் ஆட்சியரைப் பார்த்து தங்கள் தேவைகளை கூற வாய்ப்பளிக்கப்படும்.

கூட்டங்கள் நடத்துவதால் மட்டும் குறைகள் தீர்ந்துவிடாது. நாம் அவர்கள் கோரிக்கைகளை குறித்து வைத்துக் கொண்டு தீர்வு காண்பது முக்கியம். வேளாண் டெங்குகளுக்கும், வயல்வெளிகளுக்கும் வாரம் ஒரு முறை சென்று பார்வையிடுவது, இடுபொருட்களின் தரத்தையும் வழங்குதலையும் செம்மைபடுத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com