ஆட்கொல்லி புலியின் உடல்நிலை குறித்து தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆய்வு

மசினகுடியில் பிடிபட்ட ஆட்கொல்லி புலியின் உடல்நிலையை தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் நீரஜ்குமார் ஆய்வு செய்தார்.
ஆட்கொல்லி புலியின் உடல்நிலை குறித்து தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆய்வு
Published on

கூடலூர்,

கூடலூர், மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு 4 பேரை புலி கடித்துக்கொன்றது. இதையடுத்து அந்த புலியை பிடிக்கும் பணி தொடங்கியது. ஆனால் அந்த புலி வனத்துறையினருக்கு போக்கு காட்டியது. இதையடுத்து வனத்துறையினர் அந்த புலியை போராடி கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

அப்போது புலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இரும்பு கூண்டுக்குள் அடைத்து கர்நாடக மாநிலம் மைசூரு வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வனத்துறையின் கால்நடை மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதிகாரி ஆய்வு

தற்போது அந்த புலியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நன்கு குணம் அடைந்தவுடன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் நீரஜ் குமார் நேற்று முன்தினம் மைசூரு வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு சென்றார். அங்கு ஆட்கொல்லி புலி உடல்நிலை குறித்து ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

எடை அதிகரிப்பு

ஆட்கொல்லி புலிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருவதால் அதன் உடல் எடை 200 கிலோவாக அதிகரித்து உள்ளது. உடலில் இருந்த 2 பெரிய காயங்கள் குணமடைந்துவிட்டன. சில இடங்களில் உள்ள காயங்கள் குணமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவக்குழுவினரின் உத்தரவுக்கு அந்த புலி கட்டுப்படுகிறது. இருந்தபோதிலும் அதன் ஆக்ரோஷம் இன்னும் மாறவில்லை.

எனவே அந்த புலி இரும்புக் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com