வேலூரில் குட்டி முருகர் என்று அழைக்கப்படும் குழந்தை கைது? - தமிழக அரசு விளக்கம்

குழந்தையின் பெற்றோருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
வேலூர் தீர்த்தகிரி முருகன் கோவிலில் விபூதி வழங்கி யாசகம் பெற்று வந்த குட்டி முருகர் என்று அழைக்கப்படும் குழந்தையை போலீசார் கைது செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இது முற்றிலும் தவறான தகவல். வேலூர் மாவட்டம் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் விபூதி வழங்கி, யாசகம் பெற்று வந்த மாற்றுத்திறனாளி குழந்தை மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவரது பெற்றோருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், குழந்தை கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
சிறார்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி தவறான தகவலை பரப்புவது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






