

திருப்பூர்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மர்ம பெண் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆண் குழந்தை
திருப்பூர் செரங்காடு 3-வது வீதியை சேர்ந்தவர் கோபி (வயது 30). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவரது மனைவி சத்யா (28). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சத்யா 2-வதாக கர்ப்பமானார். இதையடுத்து. சத்யாவுக்கு கடந்த 18-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோபி, அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு மறுநாள் சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் 3-வது மாடியில் உள்ள மகப்பேறு வார்டில் தாயும், சேயும் சிகிச்சை பெற்று வந்தனர். சத்யாவுக்கு துணையாக கோபியின் தாயார் மாலா (60) உடன் இருந்து கவனித்து வந்தார்.
சத்யாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக நேற்று மாலை 5.30 மணி அளவில் 3-வது தளத்தில் இருந்து 2-வது தளத்தில் உள்ள ஆபரேசன் தியேட்டருக்கு மருத்துவமனை ஊழியர்கள் அவரை அழைத்து சென்றனர். அந்த நேரம் சத்யா லிப்டில் சென்றார். அவருடைய மாமியார் மாலா, குழந்தை மற்றும் பையை தூக்கி படிக்கட்டு வழியாக வந்தார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை தான் தூக்கி வருவதாக கூறி எடுத்து வந்துள்ளார். குழந்தையை வைத்திருந்த பெண் படிக்கட்டில் வேகமாக இறங்கினார். ஆனால் மாலா மெதுவாகத்தான் கீழே இறங்கினார். லிப்ட் 2-வது தளம் வந்ததும், லிப்டில் இருந்து சத்யா வெளியே வந்தார். அப்போது அந்த பெண்ணிடம் குழந்தை இல்லை. குழந்தையை எங்கே என்று அந்த பெண்ணிடம் சத்யா கேட்டபோது உங்களது மாமியார் கொண்டு வருகிறார் என கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். சில நொடிகளில் மாலாவும் குழந்தை இ்ல்லாமல் வெறுங்கையோடு வந்ததை பார்த்து சத்யா அதிர்ச்சியடைந்தார். குழந்தை எங்கே என்று மாமியார் மலாவிடம் கேட்டார். அப்போது மாலா, அந்த பெண்ணிடம் குழந்தை இருப்பதாக கூறினார். அதற்குள் அந்த மர்ம பெண் மாயமானார்.
அதன் பிறகே சத்யாவுக்கு தனது குழந்தையை அந்த பெண் கடத்தி சென்றது தெரியவந்தது. உடனடியாக அவர் மருத்துமனை ஊழியர்களிடம் தெரிவித்தார். கதறி அழுதபடி அவரே ஆஸ்பத்திரிக்கு வெளியே சென்று தேடினார். ஆனால் அந்த பெண்ணை காணவில்லை.
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் அரசு மருத்துவமனை சென்று சத்தியாவிடம் விசாரணை மேற்கொண்டார்கள்.
பைக்குள் வைத்துக் கடத்தல்
விசாரணையில் அந்தப் பெண் பையை தூக்கியபடி மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதனால் குழந்தையை பையில் வைத்து கடத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்துவமனையில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர். பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மர்ம பெண் கடத்தி சென்ற சம்பவத்தால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
--------
(பாக்ஸ்)
உறவினர் போல் நடித்த பெண்
சத்யாவின் மாமியார் மாலா கூறும் போது,
சத்யா குழந்தை பிறந்து சிகிச்சையில் இருந்தபோது கடந்த மூன்று நாட்களாக அந்த மர்ம பெண் எங்களைப் பார்க்க வருவார். எங்களிடம் சகஜமாக பேசினார். தனது உறவினர் பெண் கர்ப்பமாக இருப்பதாகவும், அவரை கீழ்த்தளத்தில் அனுமதித்துள்ளதாகவும் கூறி எங்களிடம் பேசி வந்தார். டீ வாங்கிக் கொடுத்தால் எங்களுடன் அமர்ந்து சாப்பிடுவார். நன்றாக பழகியதால் அவரை நம்பி, படிக்கட்டில் இறங்குவதற்கு சிரமமாக இருந்ததால் குழந்தையை அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் இப்படி குழந்தையை கடத்தி சென்று விட்டாளே என்று கதறி அழுதார்.
என்றனர்.
----