

சென்னை,
நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிட்டார். இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வன் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை கடந்த 24ந்தேதி நடந்தது. இதில் இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் முறையே ரெட்டியார்பட்டி நாராயணன் மற்றும் முத்தமிழ்செல்வன் பதவியேற்பு நிகழ்ச்சி நாளை நடைபெற இருந்தது.
இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணியானது முடிவடையாத நிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. வருகிற நவம்பர் 1ந்தேதி அ.தி.மு.க. உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.