த.வெ.க. கூட்டத்திற்கு குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் வர வேண்டாம் - செங்கோட்டையன்

த.வெ.க. கூட்டத்துக்கு பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
த.வெ.க. கூட்டத்திற்கு குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் வர வேண்டாம் - செங்கோட்டையன்
Published on

சேலம்,

சேலத்தில் விஜய் பிரசார கூட்டத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு த.வெ.க.வினர் போலீசில் மனு கொடுத்தனர். ஆனால் போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி கொடுக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் வரும் 13-ந் தேதி விஜய், பொதுமக்கள் சந்திப்பாக இல்லாமல் த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். இந்த சந்திப்பு கூட்டத்தை நடத்த 51 நிபந்தனைகளையும் போலீசார் விதித்தனர். இதன்படி சேலம் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து-நடராஜன் திடலில் இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

இதில் விஜய் பிரசார வேனில் நின்றபடிதான் பேச இருக்கிறார். இந்த கூட்டத்திலும் த.வெ.க. நிர்வாகிகளுக்கு இருக்கைகள் போடப்படாது. இக்கூட்டத்தில் மொத்தம் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி சீட்டும் வழங்கப்படுகிறது.

இதனிடையே சேலம் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை ஒழுங்குபடுத்த த.வெ.க.வினர் 850 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 100 பெண்களும் பங்கேற்றுள்ளனர். 5 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்க மாட்டார்கள் என தவெகவினர் உத்தரவாதம் அளித்த நிலையில், காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் குழந்தைகள் மற்றும் கருவுற்றப் பெண்கள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது, அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சேலம் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்துக்கு பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சேலத்தில் நடைபெறும் த.வெ.க. கூட்டத்திற்கு குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், உடல்நிலை சரியில்லாதவர்கள் என யாரும் வர வேண்டாம், தொலைக்காட்சி மூலமாக நிகழ்ச்சியை பாருங்கள் என்று அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், சேலத்தை பொறுத்தவரைக்கும் இந்த மாவட்டம் பிரிப்பதற்கு முன்பாக மாங்கனி மாவட்டம் என அழைக்கப்பட்டு வந்தது. இங்கு பல தொழில் செய்பவர்கள் உள்ளனர். காவல்துறை சொன்ன அனைத்து விஷயங்களையும் செய்யப்பட்டுள்ளது. கழகத்தின் நிர்வாகிகள் குறுகில காலத்தில் இவற்றை செய்துள்ளனர். 

விஜய்யின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வரலாறு படைப்பதாக அமைந்து வருகிறது. இந்நிலையில் மக்களை காணுவதற்கு விஜய் வர உள்ளார். சேலத்தில் இருக்கும் மக்களுக்கு வரலாறு படைக்கும் நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமையும். இதற்காக கழக நிர்வாகிகள் அரும்பணி ஆற்றி வருகிறார்கள்

முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com