நெல்லில் 'அ' எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

விஜயதசமி திருநாளையொட்டி பள்ளிகளில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகள் நெல் மணியில் ‘அ’ எழுதி கல்வியை தொடங்கினர்.
நெல்லில் 'அ' எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
Published on

விஜயதசமி திருநாள்

விஜயதசமி திருநாளில் தொடங்கும் செயல் நிச்சயம், வெற்றியை அளிக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் கல்வியை தொடங்கும் குழந்தைகள், கல்வியில் பெரிய அளவில் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் விஜயதசமி திருநாளில் பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். இதற்காகவே பள்ளிகளில் வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதன்படி விஜயதசமி திருநாளான நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்ப்பதற்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பல பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுடன் காலையிலேயே கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

நெல் மணியில் 'அ'

பின்னர் விரும்பிய பள்ளிகளில் சேர்ப்பதற்கு குழந்தைகளை அழைத்து சென்றனர். பள்ளிகளில் விஜயதசமி வழிபாடுகள் நடத்தப்பட்டு பின்னர் மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் ஆசிரியைகள் குழந்தைகளின் விரலை பிடித்து நெல் மணி, மஞ்சள் கலந்த அரிசியில் தமிழின் உயிர் எழுத்துகளில் முதல் எழுத்தான அ எழுத வைத்து கல்வியை தொடங்கி வைத்தனர்.

குழந்தைகளும் மிகுந்த ஆர்வமுடன் நெல் மற்றும் அரிசியில் 'அ' ஆர்வமுடன் எழுதினர். மேலும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் போன்றவை வழங்கப்பட்டன. அதேபோல் ஒருசில பள்ளிகளில் விளையாட்டு சாதனங்களில் குழந்தைகளை விளையாட வைத்து உற்சாகப்படுத்தினர்.

கோவில்கள்

மேலும் பள்ளிகளில் மட்டுமின்றி கோவில்களிலும் விஜயதசமியையொட்டி பூஜைகள் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடந்தது. அதில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவிக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதையடுத்து குழந்தைகளின் நாவில் நெல் மணியால் 'அ' எழுதப்பட்டது. நெல், அரிசியில் குழந்தைகள் எழுதி கல்வியை தொடங்கினர்.

அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் விஜயதசமி தின சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து குழந்தைகள் கல்வியை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. அதில் பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்றனர். தாயின் மடியில் அமர்ந்து கொண்டு குழந்தைகள் அரிசியில் எழுதி கல்வியை தொடங்கினர்.

சின்னாளப்பட்டி

இதேபோல் விஜயதசமியையொட்டி சின்னாளப்பட்டியில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நேற்று நடைபெற்றது. பள்ளியின் அறங்காவலரும், முதல்வருமான திலகம் புதிதாக சேர்ந்த மாணவர்களின் கை விரல்களை பிடித்து நெல் மணியில் 'அ' என எழுத வைத்தார். பெற்றோர்கள் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு குழந்தைகளை சேர்த்தனர்.

இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், விஜயதசமி நாளன்று உயிர் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' எழுதி பள்ளியில் சேர்ப்பதன் மூலம் குழந்தைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். இந்த நாட்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அதிகளவில் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர் என்றார். நிகழ்ச்சியில் நிர்வாக அறங்காவலர் சிவக்குமார், மேலாளர் பாரதி மற்றும் ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com