

திருவொற்றியூர்,
திருவொற்றியூரில் கதவைத் திறக்க முடியாமல் தவித்த குழந்தைகளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்டனர்.
திருவொற்றியூர், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்புகுமார். இவர் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது 10 வயது மகளும், 4 வயது மகனும் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இருந்தபோது, கதவைப் பூட்டினர். அப்போது கதவில் இருந்த கைப்பிடியுடன் கூடிய பூட்டு திடீரென பழுதடைந்தது.
இதனால் கதவைத் திறக்க முடியாமல் போனது. இதையடுத்து, அறைக்குள் இருந்த அக்காளும், தம்பியும் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். பின்னர், கதவின் பூட்டை லாவகமாக உடைத்து அறைக்குள் சிக்கியிருந்த 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, குழந்தைகள் இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் குழந்தைகள் மீட்கப்பட்டனர்.