

மதுரை,
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் சித்திரை பெரு விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. திருக்கல்யாணத்தை நேரில் கண்டு தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200 மற்றும் ரூ.500-க்கான கட்டண சீட்டுகளை பெறுவதற்கு முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது.
ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் பக்தர்கள் https://hrce.tn.gov.in மற்றும் கோவில் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in-னம் தொடங்கி 22-ம் தேதி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. பின்னர் திருக்கல்யாண டிக்கெட் குலுக்கல் முறையில் தேர்வு செய்தவர்களுக்கு அலைபேசி, இமெயிலில் 23-ந் தேதி குறுந்தகவல் தெரிவிக்கப்படும்.
டிக்கெட் கிடைத்ததற்கான குறுந்தகவல் பெற்றவர்கள் 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை எல்லீஸ்நகரில் அமைந்துள்ள யாத்ரிநிவாஸ் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த தகவல்களை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண கட்டண சீட்டை பெறலாம். ரூ.500 பதிவில் ஒருவர் 2 கட்டண சீட்டுகளும், ரூ.200 பதிவில் ஒருவர் 3 கட்டண சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஒரே நபர் ரூ.500, ரூ.200 இரண்டையும் பதிவு செய்ய இயலாது. ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கும் பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான எல்லீஸ்நகரில் அமைந்துள்ள யாத்ரிநிவாஸ் தங்கும் விடுதியில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு கோவில் பணியாளர்கள் 2 கணினிகள் மூலம் முன்பதிவு செய்து கொடுக்கிறார்கள்.
கட்டண சீட்டு முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டை, போட்டோ, கைபேசி எண், மின் அஞ்சல் முகவரியை வழங்கி முன்பதிவு செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நேரடி முன்பதிவு செய்யும் இடத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவர்களை கோவில் பணியாளர்கள் வரிசையாக நிற்க வைத்து பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி ரூ.500 மற்றும் ரூ.200 டிக்கெட்டுகளை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைன் மற்றும் நேரில் சென்று பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தாண்டு திருக்கல்யாணத்தை காணும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.