

தேனி,
தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவி கயல்விழியுடன் கலந்து கொண்டார்.
பின்னர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சாலை அமைக்க வேண்டும்
கண்ணகி கோவில் என்பது சேரன், சோழன், பாண்டியன் ஆகிய 3 மன்னர்களையும் இணைக்கும் வரலாற்றுடன் தொடர்புடையது. இரு மாநில மக்களும் ஒற்றுமையுடன் இந்த திருவிழாவை கொண்டாடுவது வரவேற்கத்தக்கது. இந்த ஒற்றுமை நீடித்து, நிலைக்க வேண்டும்.
இந்த கோவில் அமைந்து உள்ள நிலம் தமிழகத்திற்கு சொந்தமானது. ஆனால், கேரள மாநில பகுதி வழியாக செல்வதற்கு தான் சாலை வசதி உள்ளது. தமிழக பகுதியான பளியன்குடி வழியாக சாலை அமைக்கப்படவில்லை. சாலை அமைக்க தமிழக அரசு இத்தனை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த கோவிலை பராமரித்து, பாதுகாப்பதோடு, பளியன்குடி வழியாக சாலை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். தமிழகத்தின் பெருமை மிக்க அடையாளமான கண்ணகி கோவிலை பாதுகாக்க வேண்டும்.
ஒப்படைக்க வேண்டும்
இந்த கோவிலை கேரள தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பது என்பது கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கும். எனவே கோவிலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.