

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் கிராமம் கலைவாணர் தெருவில், விநாயகர் கோவிலுக்கு வெளியே சாலையையொட்டி 2 சாமி சிலைகள் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதுபற்றி கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவனுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று, 2 சாமி சிலைகளை ஆய்வு செய்தனர். அப்போது அவை சோழர் கால பவுத்த சிற்பங்கள் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:-
பெரியதச்சூரில் கண்டறியப்பட்டுள்ள 2 சிற்பங்களில் ஒன்றில் வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடக்கிய நிலையில் 'உத்குடி' ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அவரது தலைக்கு மேலே 5 தலை நாகம் படம் எடுத்த நிலையில் உள்ளது. இது ஒரு பவுத்த சிற்பமாகும். இதில் இருப்பது 'போதிசத்துவர்' என்று மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கோ.விஜய வேணுகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே அருகிலுள்ள ஆலகிராமத்தில் பவுத்த சிற்பம் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இங்கும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சைவம், வைணவம், சமணத்துடன் பவுத்தமும் செழித்து விளங்கியதை அறிய முடிகிறது.
அதேபோன்று, மற்றொரு சிற்பம் கலைநயமிக்க துவாரபாலகர் சிற்பமாகும். நீண்ட மகுடம், பெரிய கண்கள், கோரைப் பற்கள் மற்றும் காதணிகளுடன் காணப்படும் இந்த சிற்பம் மிகவும் நளினமான தோற்றத்தில் உள்ளது. இதன் கால்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இச்சிற்பம் அங்கு முன்பு இருந்த ஏதோ ஒரு பழமையான சிவாலயத்திற்கு உரியதாக இருக்கலாம்.
இந்த இரண்டு சிற்பங்களும் கி.பி. 10 முதல் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிற்பங்கள் ஆகும். மேலும், இப்பகுதியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் பல்லவர் கால 'மூத்ததேவி' (ஜேஷ்டா) சிற்பமும் உள்ளது. இதன் மூலம் பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் இந்தக் கிராமம் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகத் திகழ்ந்துள்ளது உறுதியாகிறது. இத்தகைய வரலாற்றுச் சின்னங்களை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.