ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோவிலுக்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை

ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை எடுத்து சென்றனர். இது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது.
Published on

நாமபுரீஸ்வரர் கோவில்

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருஸ்தலத்திற்கு அடுத்தபடியாக 2-வது குருஸ்தலமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, கோவிலை புதுப்பிக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.

இதனைதொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை செய்தனர். இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.15 மணியளவில் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10.30 மணியளவில் உத்திராங்க பூஜையும், மாலை 5 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு வாணவேடிக்கையுடன் தேரோட்டமும் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை

இந்தநிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும், அதேபோல் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் சென்று கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் மாலை ஆலங்குடி செட்டி பிள்ளையார் கோவில்வாசலில் இருந்து சிவாச்சாரியார்கள் மற்றும் கிராம பெண்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேங்காய், பழம், பூ தட்டுடன் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

இதேபோல் கும்பாபிஷேகம் நடைபெறும் தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவிலுக்கு ஆலங்குடி பகுதியில் உள்ள புனித அதிசய அன்னை தேவாலயத்திலிருந்து பங்குத்தந்தை ஆர்.கே.சாமி தலைமையிலும், ஆலங்குடி பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் மற்றும் கலிபுல்லா நகர் ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து தேங்காய், பழம், பூ தட்டுடன் நேற்று சீர்வரிசை எடுத்து கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் ஊர்வலமாக சென்றனர்.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு

சீர்வரிசை எடுத்துச்சென்ற கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தினரை கோவில் நிர்வாகத்தினர் ஆரத்தழுவி மேள தாளங்கள் முழங்க வரவேற்றனர். சாதி, மதங்களை கடந்து மத ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com