கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது:தூத்துக்குடி திருஇருதய பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு புதன்கிழமை தூத்துக்குடி சின்னக்கோயில் திருஇருதய பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது:தூத்துக்குடி திருஇருதய பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி சின்னக்கோயில் திருஇருதய பேராலயத்தில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

தவக்காலம்

ஏசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ மக்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். இந்த நாட்களில் உண்ணா நோன்பு இருத்தல், அசைவ உணவு தவிர்த்தல், ஜெபம் செய்தல் உள்ளிட்டவைகளை கிறிஸ்தவ மக்கள் மேற்கொள்வார்கள். இந்த தவக்காலம் நேற்று முதல் தொடங்கியது. தொடக்கநாள் சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி சின்னக்கோவில் திருஇருதய பேராலயத்தில் நேற்று காலை பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

சாம்பல் புதன்

சாம்பல் புதனை முன்னிட்டு கடந்த ஆண்டு குருத்தோலை பண்டிகைக்கு பிறகு மக்கள் வாங்கி சென்ற குருத்தோலைகள் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டு, அந்த ஓலைகள் எரிக்கப்பட்டன. அதன் சாம்பலை கொண்டு பங்கு மக்கள் நெற்றியில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி, சிலுவை வரைந்து ஆசி கூறினார். நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

பனிமயமாதா ஆலயம்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்றனி புரூனோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 40 நாட்கள் தவக்காலம் முடிவில் புனிதவெள்ளியும், ஈஸ்டர் பண்டிகையும் நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com